திருப்பூர் வெடிகுண்டு விபத்து: தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

2 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆங்காங்கே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அந்தந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையினர் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் முறைகேடான செயல்கள் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து, அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இதுபோன்ற கண்காணிப்பெல்லாம் கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெறாததன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், பி.என். ரோடு, பாண்டியன் நகர் அருகே உள்ள சத்யா காலனியில் உள்ள வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டதில், அந்த வீட்டின் முன் இருந்த மளிகைக் கடை, அதைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட ஒட்டு வீடுகள் நொறுங்கியதாகவும், இந்த வெடி விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமமைடந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த வெடி விபத்து ஏற்பட்ட வீட்டினை ஆய்வு செய்த காவல் துறையினர், அந்த வீட்டில் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சேர்ந்தவர் சட்டவிரோதமாக வெடி தயாரித்து வந்த நிலையில், நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், அந்த வீட்டிலிருந்து 125 கிலோ வெடி மருந்துகள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மேற்படி வீட்டில், கடந்த சில மாதங்களாக வெடி தயாரித்து வந்தும், அது காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வராதது ஆச்சரியமளிக்கிறது.

பொதுவாக, ஒரு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுமேயானால், அவை காவல் துறையினரின் ரோந்துப் பணி மூலமாகவோ அல்லது உளவுத் துறை மூலமாகவோ காவல் துறையினரின் கவனத்திற்கு நிச்சயம் வரும். மேற்படி சட்ட விரோதச் செயல் சில மாதங்களாக நடைபெற்று வந்தும் அது காவல் துறையினரின் சுவனத்திற்கு வராதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு ஏதாவது இருக்கிறதா என்று புரியவில்லை. மேற்படி விபத்து, தி.மு.க. அரசு சட்டம்-ஒழுங்கை காக்க தவறிவிட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த விபத்தின்மூலம், அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு, சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி விபத்திற்கு தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்பதால், மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கவும்; படுகாயமுற்றவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும்; வீடுகளை இழந்தவர்களுக்கு அவற்றைக் கட்டித் தரவும்; குடியிருப்புப் பகுதிகளுக்கிடையே வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள்மீதும் வழக்குப்பதிவு செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article