
சென்னை,
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குனரகம், பேரூராட்சி இயக்குனரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர்-இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய 2,569 பணியிடங்களை நிரப்ப கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வாளர்களுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 29, 30-ந் தேதி மற்றும் ஜூலை மாதம் 6-ந் தேதி ஆகிய தேதிகளில் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் தேர்வு பெற்ற தேர்வாளர்களுக்கு அக்டோபர் மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடித்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.