திருப்பூரில் இன்று அதிகாலை பயங்கரம்; இந்து முன்னணி பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்; போலீசார் தீவிர விசாரணை

1 week ago 3

திருப்பூர்: திருப்பூரில் இன்று அதிகாலை 3 பேர் கும்பலால் இந்து முன்னணி பிரமுகர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர், குமரானந்தபுரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவருக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது. பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்து முன்னணி திருப்பூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். பாலமுருகன், மனைவி, பெற்றோருடன் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பாலமுருகனுக்கு நள்ளிரவு 12 மணிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதை தொடர்பு கொண்ட சிறிது நேரத்தில், வெளியே சென்றார் பாலமுருகன். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில், ‘பாலமுருகனை காணவில்லை’ என அவரது உறவினர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தனர். அப்போது வீட்டின் அருகில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மர்மநபர்களால் பாலமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்து தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மாநகர துணை கமிஷனர் பிரவீன் கவுதம், உதவிகமிஷனர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இன்று அதிகாலை 4 மணிக்கு 3 பேர் கும்பல், பாலமுருகனை அவர் வசிக்கும் அதே வீதியில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருப்பூரில் இன்று அதிகாலை பயங்கரம்; இந்து முன்னணி பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்; போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article