திருப்பூர், மே 14: தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 24ம் தேதி நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானது முதலே கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேர ஆர்வம் காட்டி விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்றைய தினம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பள்ளியின் அடையாள குறியீடு வைத்து தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு வழங்கினர். நேற்று திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை முதலே மாணவிகள் வரிசையில் காத்திருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச் சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து விடைத்தாள் நகல் பெற 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
The post திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் appeared first on Dinakaran.