திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரையில் குவிந்த இந்து அமைப்பினர்

3 hours ago 1

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்துக்கு அனுமதி கேட்டு இந்து அமைப்பினர் ஐகோர்டில் மனுசெய்ய, அம்மனு இன்று விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியிலும், மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்ஹாவுக்கு செல்லும் வழியிலும், கீழேயுள்ள பள்ளிவாசல் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்று காலை பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் மதுரையிலுள்ள வீட்டில் காவலில் வைக்கபட்டார். இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே போலீசாருக்கு தெரியாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் பா.ஜ.க. கொடியுடன் வந்து குழுமி முழக்கமிட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த சூழலில் இந்து முன்னணி சார்பில் தாக்கல் செயப்பட்ட மனுவை இன்று மதியம் விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் மதம் மற்றும் தனி நபர்களை விமர்சித்தோ, பிரச்னை ஏற்படும் வகையிலோ ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இந்து அமைப்பினை சேர்ந்த ஏராளாமானோர் கலந்து கொண்டுள்ளனர். 

Read Entire Article