சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
கோவை மாவட்டம், பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழின முன்னோர்களால் கட்டப்பட்ட ஆதித்தமிழ் பாட்டன் சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த மறுப்பது தமிழ்மொழியையும், இனத்தையும் அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி, தெய்வத்தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றோம். நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கினை தமிழ் வழியில் நடத்த ஆவன செய்தது.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கரூர் பசுபதீசுவரர் ஆலயக் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணி சார்பாகத் தமிழ்வழியில் குடமுழுக்கு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோவில் நிர்வாகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள்.
அதன் பிறகு, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலின் குடமுழுக்கையும் தமிழில் நடத்த முதலில் திமுக அரசு மறுத்தபோதும், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு வேறுவழியின்றித் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்நிலையில் வருகின்ற 10.02.2025 அன்று பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் அதனைத் தமிழில் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை கோயில் நிர்வாகம் வெளியிடாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தக் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் திட்டமிட்டுள்ளதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
ஆகவே, கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அதுகுறித்த அறிவிப்பாணையை முன்கூட்டியே வெளியிடுமாறும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.