திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுனர், அரசுக்கு இடையிலான மோதலால் உயர்கல்வி பாதிக்கக்கூடாது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. 7 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர்கல்விதுறையில் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் 11 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாவிடும். துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லத்தக்கது அல்ல. இந்த நிலை நீடிக்கக்கூடாது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாராட்டி, தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்த எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமை வலியுறுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும். ஆன் லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 19 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடைபெற அரசு முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 658 சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் முடிவை அரசு கைவிட்டு போட்டித்தேர்வின் மூலமே நியமிக்கவேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களும் இஸ்லாமியர்களுக்கும் கடைபிடித்த நடைமுறை தொடர்பான அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையென்றால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு கூறினார்.
The post திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; இருதரப்பும் நீதிமன்றத்தை நாடலாம்: ராமதாஸ் யோசனை appeared first on Dinakaran.