
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில், மலை அடிவாரத்தில் பழனியாண்டவர் கோவில், கீழத்தெருவில் குருநாத சுவாமி கோவில், மேலரத வீதியில் பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் துணை கோவில்களாகும். இந்த கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் துணை கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. 17-ந் தேதி தொடங்கிய திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கடந்த திங்கட்கிழமை காலையில் சொக்கநாதர் கோவில் மற்றும் பழனியாண்டவர் கோவிலில் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று 2-ம் காலம், 3-ம் காலம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதேபோல குருநாத சுவாமி கோவில், பாம்பாலம்மன் கோவில்களிலும் கலசங்கள் வைத்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அந்த கலசங்களில் உள்ள புனித நீரால், காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் செய்வதற்கு பயன்படுத்திய புனித நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.