திருப்பம் தரும் திருப்புகழ்-17

3 hours ago 1

கோடிக் கோடி பாடிப் பாடி

அருணகிரி நாதரையே தன் அருள் குருவாக ஏற்றுக் கொண்டு, தான் பாடிய அனைத்து அருள்பனுவல்களின் நிறைவிலும் மறக்காமல் அவர் பெயரையே பொறித்து வைத்த அருளாளர் பாம்பன் குமர குருதாச சுவாமிகள். அவர் தன் குருநாதருக்கு அன்புடன் சூட்டிய பட்டப் பெயர், ‘ஓசை முனிவர்’. சந்தம் முந்தும் அந்த செந்தமிழ் ஓசையில் சிந்தை பறிகொடுத்தவன் கந்தன். அவர் தந்த செந்தமிழ் மாலையையே தன் பன்னிருதோள்களில் மணியாமாகச் சூட்டி மகிழ்ந்தாள்.

“மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே!
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே!’’
உள்ளம் உருகி நாம் பாடும் செந்தமிழை ஏற்றுக்கொள்ள ஆண்டவன் இருக்கும் பொழுது. அதை, அறியாமல் அழியும் மானிடர்களை ‘இந்திரன் சந்திரன்’ என ஏற்றிப் போற்றி அவலவயிற்றை வளர்ப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது என்று கடிந்துகொள்கிறார் அருணகிரியார்.

“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செயு மாறே’’
என்று திருமூலரும் திருமந்திரத்தில் பாடுகிறார்.

திருச்செந்தூர் தலத்தில் பாடிய ‘முந்து தமிழ் மாலை கோடிக் கோடி’ என்ற திருப்புகழில் ‘செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார’ என்று கந்தனை தமிழ்க் கடவுளாகவே காண்கிறார் அருணகிரியார்.

‘காலம் அறிவான்! கருணைபுரிவான்!

என்றொரு வாசகம் உண்டு. எப்போது நமக்கு என்ன வேண்டுமோ அதை இறையருள் வழங்கும் என்னும் பூரண நம்பிக்கையோடு பொருந்துவதுதான் உண்மையான ஆன்மிகம். பிள்ளைக்கு எப்போது என்ன தர வேண்டும் என்பது அன்னைக்குத் தெரியாதா! ‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்பது மணிவாசகர் வாக்கு. ஆதரித்து அருள் ஆறுமுகன் இருக்கும்போது’ அவலர் மேற்சொற்கள் கொண்டு கவிகள் ஆக்கிப் புகழாதீர்கள்’ என்று அறிவுரை வழங்குகிறார் அருணகிரியார்.

முந்து தமிழ் மாலை கோடிக் கோடி
கந்தமொரு நீடு பாடிப் பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே
முந்தை வினையே வராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமையேனை ஆளத்தானும் முனைமீதே
திந்தி திமி தோதி தீதித் தீதி
தந்த தன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடமாடும்
செஞ்சிறிய சால் விசாலத் தோகை
துங்க அனுகூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது
வருவாயே’’

கோடிக் கோடி பாமாலைகள் பாடிப் பாடி கொண்டாட வேண்டிய குமரன் இருக்க ஈயாத லோபிகளின் இல்லம் தேடிக் கேடி வாடி வாடி வருந்தாதீர்கள். உங்கள் முன்வினைகள் எல்லாம் முருகன் அருள் பெற்றால் முழுவதுமாக நீங்கிவிடும்.

``வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே! – செந்தில் நகர்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை!’’
செந்தூரில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மகிமை பெற்றது. ஆதிசங்கரரின் தீராத வயிற்றுவலி செந்தூர் முருகனின் பன்னீர் இலை திருநீற்றால் நீங்கியது. அப்போது அவர் பாடியதுதான் சுப்ரமண்ய புஜங்கம். வேலவனே! உன்னைப் போல் விரைந்து அருள் வழங்கும் வேறு தெய்வத்தை நான் அறிந்தது இல்லை. நான் அறிந்தது இல்லை என ஒருமுறைக்கு இருமுறை உறுதிபடக் கூறுகின்றார். அதையே இப்பாடலில் ‘முந்தை வினையே வராமற்போக’ என அருணகிரியார் கூறுகின்றார். சந்தம் முந்தும் இப்பாடலில் முருகனின் மயில் வாகனச் சிறப்பை அதிஅற்புதமாக எடுத்துரைக்கின்றார்.

“செஞ்சிறியகால்
விசாலத் தோகை
துங்க அனுகூல பார்வை
தீர செம்பொன் மயில் மீதிலே
எப்போது வருவாயே!’’

இச்செந்தூர் திருப்புகழின் பிற்பகுதி செந்தமிழ் மாலைக்கார வேற்கார, தாற்கார, ஆண்மைக்கார, நேயக்கார என அருமையான தாளக்கட்டுடன் நிறைவு பெறுகிறது. பன்னிரு தோள் கொண்ட பால முருகனை பன்னிரண்டு அடிகளில் நாவார அழைத்து மகிழ்கின்றார் அருணகிரிநாதர்.

“அந்தண் மறை வேள்வி காவற்கார
செந்தமிழ் சொல் பாவில் மாலைக்கார
அண்டர் உபகார சேவற்கார முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார

அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான
சிந்துர மின் மேவு போகக் கார
விந்தை குறமாது வேளைக் கார
செஞ்சமரை மாயும் மாயக் கார
துங்க ரண சூர சூறைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார பெருமாளே!’’

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post திருப்பம் தரும் திருப்புகழ்-17 appeared first on Dinakaran.

Read Entire Article