திருப்பத்தூர் மாவட்டத்தில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி, வேளாண் அறிவியல் மையம் அமைக்க வேண்டும்

10 hours ago 2

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒட்டுண்ணி, வேளாண் அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சீனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நடைபெற்ற விவாதங்கள்:
விவசாயி: திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் கோழிக்கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.

இதனால் ஏரிக்கரையில் உள்ள சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் மதுக்கடைகளுக்கு குடிக்க வரும் மதுப்பிரியர்களும், அங்கு கடை வைத்துள்ள நபர்களும் பிளாஸ்டிக் பொருட்களை
விவசாய நிலங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இதனால் விவசாயம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது.

அதிகாரி: சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: மாதனூர் அருகே பெரியசோமேஸ்வரம் பகுதியில் உள்ள நிலங்களில் தோல்கழிவுகள் கொட்டி செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அதிகாரி: கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து கழிவுகள் அகற்றப்பட்டு, கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: வாணியம்பாடி உழவர்சந்தைக்கு தினமும் ஏராளமான விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய வருகின்றனர். ஆனால் அங்கு போதுமான கடைகள் இல்லாமல், தரை கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளது. எனவே உழவர்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அதிகாரி: விரிவாக்கம் செய்ய போதுமான இடம் உள்ளதா என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: மாதனூர் அருகே பாலூர் ஏரியானது அதிக மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் பாசனம் செய்வதற்கும், தண்ணீர் தேக்கவும் சிரமமாக உள்ளது.

அதிகாரி: சம்பந்தப்பட்ட ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: கருந்தலைப்புழு தாக்குதலால் சேதமடைந்த தென்னை மரங்களை கலெக்டர் ஆய்வு செய்து அதற்கான இழப்பீடு பெற்று தர வேண்டும். கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை சார்பில் ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகிறது.

ஆனால் அவை பல கி.மீட்டர் தூரத்தில் இருந்து வருவதால், அதிக அளவிலான ஒட்டுண்ணிகள் இறக்கின்றன.

எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒட்டுண்ணி மையம் அமைக்க வேண்டும். மேலும் வேளாண் அறிவியல் மையமும் அமைக்க வேண்டும்.

அதிகாரி: தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் அறிவியல் மையம் அமைக்க பரிந்துரைகள் அனுப்பப்பட்டு உள்ளது.

விவசாயி: ஏலகிரி மலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.

அதிகாரி: ஏலகிரி மலையில் அதிக அளவு தீ விபத்து ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

விவசாயி: உமராபாத் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஆட்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான நேரம் மூடிக்கிடக்கிறது. அங்கு ஆட்களை நியமிக்க வேண்டும்.

அதிகாரி: அங்கு நிரந்தர பணியாளர் விரைவில் நியமிக்கப்படுவார்.

விவசாயி: தும்பேரி பகுதியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக விவசாயிகள் வேளாண் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்படுகின்றனர்.

அதிகாரி: அந்த பகுதியில் மே மாதத்திற்குள் மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: கந்திலியை தாலுகாவாக மாற்ற வேண்டும்.

அதிகாரி: நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: வாணியம்பாடி கல்லாறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது ஆசிரியர் காலனி வரை மட்டும் நடைபெறுவதாக தெரிகிறது. எனவே கல்லாறு பாலாற்றுடன் இணையும் அண்ணாநகர் வரை விரிவுபடுத்த வேண்டும்.

அதிகாரி: நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி, வேளாண் அறிவியல் மையம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article