வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவேந்திரன் நிர்வாகிகளுடன் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதுபற்றி நிருபர்களிடம் கூறிய அவர் சீமான் பற்றி சரமாரியாக குற்றம்சாட்டினார். இதை அக்கட்சி நிர்வாகி ஒருவர் எதிர்த்து பேசவே கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலியால் தாக்கி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், ‘தன்னிச்சையாக செயல்படுகிறார். யாரையும் மதிப்பதில்லை.
எதிர்த்து கேள்வி கேட்டால் உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கட்சியில் இருந்தா இரு… இல்லைன்னா போ’ என்று கூறுவதாக அவரது மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி சமீப காலமாக விழுப்புரம், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் பல அணிகளின் மாநில நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். சென்னையில் விலகிய சில நிர்வாகிகள் அவருக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மருத்துவர் இளவஞ்சி நேற்று விலகினார். அடுத்த சில மணி நேரங்களில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(50). முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதையடுத்து, கடந்த 2022 முதல் அக்கட்சியில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப நாதக தலைமை செயல்படுவதில்லை. அதேபோல் மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு கட்சியின் தலைமை மதிப்பளிப்பதில்லை என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணி இன்றி தனியாக தேர்தலை சந்திப்போம் என்ற கோட்பாடு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்ற காரணங்களை சுட்டிக்காட்டி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, சி.எல்.சாலையில் மாவட்ட செயலாளர் தேவேந்திரன் கட்சியில் இருந்து விலகுவது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே கட்சியை சேர்ந்த வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை பாசறை செயலாளர் நாகராஜன் (38) திடீரென அங்கு வந்தார். நாம் தமிழர் கட்சியை பற்றியும், சீமான் பற்றியும் அவதூறாக பேசினால் தாக்குவேன் என்று கூறி தேவேந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தேவேந்திரன் தரப்பினருக்கும், நாகராஜிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் கைகளாலும், நாற்காலியாலும் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், முன்னாள் தொகுதி தலைவர் ஸ்ரீராம், குருதிக்கொடை பாசறை செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* மாநில பெண் நிர்வாகி விலகியது ஏன்?
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மருத்துவர் இளவஞ்சி விலகியுள்ளார். கடந்த சிலநாட்களாகவே இவர் நாம் தமிழர் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்றால் 50 சதவீதம் பெண்கள், 50 சதவீதம் ஆண்களுக்கு என்று சரிக்கு சரி பங்கு வழங்கப்படுகிறது.
ஆனால் கட்சியில் உள்ள பதவிகள் என்று எடுத்துக்கொண்டால் இப்படி வழங்கப்படுவதில்லை என்று இளவஞ்சி குற்றச்சாட்டு வைத்திருந்தார். குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று சீமான் தலைமையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்திலேயே இளவஞ்சி கூறியிருந்தார். இது அப்போதே கட்சியில் சலசலைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் இளவஞ்சி கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், மாநில பெண் நிர்வாகி திடீர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு நாதகவில் இரு கோஷ்டி அடிதடி: நாற்காலியால் தாக்கி கொண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.