*நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமையில் நேற்று நடந்தது. இதில் முதல்வரின் அனைத்து திட்டங்கள் மற்றும் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 457 மனுக்களை கலெக்டர் சிவசவுந்திரவல்லி பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார்.
இதில் தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 208 ஊராட்சிகள் உள்ளது. இதில் சுமார் 120க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 60 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். மீண்டும் இவர்களுக்கு பணி வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.
திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த பெண் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தினர். அவர்களிடம் நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்தோம். ஆனால் எங்களிடமிருந்து வசூலித்த ரூ.8.50 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களிடம் இருந்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்’ என தெரிவித்தார்.
திருப்பத்தூர் 36வது வார்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர்கள் அளித்த புகார் மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து பணம் வசூல் செய்து புதிதாக முத்துமாரியம்மன் கோவில் கட்டினோம்.
இந்நிலையில் எங்கள் பகுதியில் மாற்று சமூகத்தினர் அதிகமானதன் காரணமாக, அந்த முத்து மாரியம்மன் கோயிலில் உள்ளே அனுமதிக்காமலும், ஒரு சமூகத்தினரை சேர்ந்த மக்களை மட்டும் புறக்கணித்துவிட்டு திருவிழா நடத்தி வருகின்றனர்.
மேலும் நாளை(இன்று) திருவிழா நடைபெற உள்ள நிலையில் எங்களை சேர்க்காமல் மாற்று சமூகத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து பண்டிகையை நடத்த வழிவகை செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிக்கு உடனே கிடைத்த 3 சக்கர ஸ்கூட்டர்
மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கலெக்டர் சிவசவுந்திரவல்லி மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, ஒருவர் ‘எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நான் இதனை வைத்து பிழைப்பு நடத்தி கொள்வேன்’ என்று தெரிவித்தார். மனுவை பார்த்த கலெக்டர் உடனடியாக அந்த நபருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க உத்தரவிட்டார். இதனால் அவர் கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
துப்புரவு பணியாளரின் மகனுக்கு வேலை
துப்புரவு பணியாளர் பெண் ஒருவர் வாணியம்பாடியில் துப்புரவு பணி வேலை செய்யும்போது நோய்வாய்ப்பட்டு அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது எனது மகனும் எந்த ஒரு வேலையும் இல்லாமல் இருந்து வருகிறார். எனவே எங்களுக்கு ஏதாவது பணி வழங்க வேண்டும் என்று மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சிவசவுந்திரவல்லி உடனடியாக வாணியம்பாடி நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மாணவிக்கு சைக்கிள்
திருப்பத்தூர் எம்.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் பெண்ணின் கணவர் உடல்நிலை பாதித்து இறந்துவிட்டார். இவரது மகள் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தற்போது 6ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மீட்டூர் பகுதியில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவி பள்ளிக்கு 6 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளதால், சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அதன்படி கலெக்டரின் பொது நிதியிலிருந்து நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாணவிக்கு கலெக்டர் சைக்கிளை வழங்கினார்.
The post திருப்பத்தூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.8.50 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி தலைமறைவு appeared first on Dinakaran.