திருப்பதியில் வீடியோ வைரல் ஆன்லைனில் வாங்கிய உணவில் புழு

2 weeks ago 4

*ஓட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்’

திருமலை : ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஆன்லைன் மூலம் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவில் புழு இருந்ததால் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதனடிப்படையில், மாநகராட்சி ஆணையர் என்.மவுரியா உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் டாக்டர் அன்வேஷ் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அந்த ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதார அலுவலர் டாக்டர் அன்வேஷ் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் புகாரின்பேரில் ஆய்வு செய்து தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருடன் ஓட்டலை ஆய்வு செய்ததில், ஓட்டல் சுகாதாரமற்றதாக இருந்தது. கையிருப்பில் உள்ள உணவு பொருட்கள் இருக்கும் இடத்தில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் உள்ளது.

எனவே ஒவ்வொரு மாதமும் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுவர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சமையலறையில் மூடியுடன் கூடிய பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும்.

பிரிட்ஜ் முறையாக செயல்படுத்த வேண்டும். சமையலர், பணியாளர்கள் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிப்பு இல்லாத சான்றிதழ்களை அவ்வப்போது பெற வேண்டும். இருப்பு வாங்கி பயன்படுத்தும்போது அதற்கான பதிவேட்டை பராமரிக்க வேண்டும். நுகர்வோருக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.

மாநகராட்சி உரிமம் மற்றும் உணவு உரிமங்கள் அனைவரும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த ஓட்டலில் இருந்து எடுக்கப்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகள் ஐதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்று வாரங்களில் அறிக்கை முடிவுகள் தெரியவரும்.

ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட பிழைகளை சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல் சோதனையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, துப்புரவு மேற்பார்வையாளர்கள் செஞ்சய்யா, சுமதி மற்றும் பலர் இருந்தனர்.

The post திருப்பதியில் வீடியோ வைரல் ஆன்லைனில் வாங்கிய உணவில் புழு appeared first on Dinakaran.

Read Entire Article