திருப்பதியில் ரதசப்தமி உற்சவம் கோலாகலம் ஒரே நாளில் 7 வாகனங்களில் பவனி வந்த மலையப்பசுவாமி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

3 months ago 7

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நேற்று காலை தொடங்கியது. ஆண்டு பிரம்மோற்சவத்தில் வரும் வாகனங்களில் 7 வாகனங்களில் நேற்று ஒரே நாளில் மலையப்பசுவாமி அடுத்தடுத்து மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்படி முதலாவதாக அதிகாலை 5.30 மணிக்கு 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி சிவப்பு மாலையும், பட்டு வஸ்திரம் உடுத்தி, தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் 4 மாடவீதிகளில் பவனி வந்து மாடவீதியில் வடமேற்கு திசையில் சூரிய உதயத்திற்காக காத்திருந்தார். காலை 6.50 மணிக்கு சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பிரகாசித்தபோது சூரியனுக்கும், மலையப்ப சுவாமிக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அப்போது மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி அடுத்தடுத்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பிற்பகல் கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசுவாமி வீதி உலா வருவதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் ரதசப்தமி உற்சவம் கோலாகலம் ஒரே நாளில் 7 வாகனங்களில் பவனி வந்த மலையப்பசுவாமி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article