திருப்பதியில் மலை சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் பாபவிநாசம் அணையில் பக்தர்களுக்கு படகு சவாரி செயல்படுத்த நடவடிக்கை

3 days ago 1

*சோதனை முறையில் அதிகாரிகள் ஆய்வு

திருமலை : திருப்பதியில் மலை சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் பாபவிநாசம் அணையில் பக்தர்களுக்கு படகு சவாரி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாரிகள் சோதனை முறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே எந்தவித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருமலைக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ளே நுழைந்தவுடன் நேர ஒதுக்கீடு டோக்கன்களை பெற்று வெளியே வந்துவிடலாம். அவ்வாறு வெளியே வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காம்ப்ளக்ஸில் எப்போது வர வேண்டும் என்று கூறும் நேரத்திற்கு சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வைக்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கும் திருமலையில் ஆன்மீக பயணத்துடன், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து படகு சவாரியை பாபவிநாசம் அணையில் உள்ள தண்ணீரில் இயக்க முடிவு செய்துள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றும், மலை சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள அணையில் படகு சவாரி புது அனுபவத்தை வழங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று சோதனை முறையில் மூன்று படகுகள் கொண்டு பாபவிநாசம் அணையில் இயக்கப்பட்டது. இதன் செயல் திட்டத்தை வைத்து எத்தனை படகுகளை இயக்க வேண்டும், ஒவ்வொரு படகிலும் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது போன்றவை விரைவில் திட்டமிட்டு அதற்கு ஏற்ப செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த படகு சவாரி திட்டத்தை வனத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் மூலம் தொடங்கி வைக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தினால் பாபவிநாசம் அணை மாசுபடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post திருப்பதியில் மலை சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் பாபவிநாசம் அணையில் பக்தர்களுக்கு படகு சவாரி செயல்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article