ஆந்திரா: திருப்பதி திருமலையில் தரிசனத்திற்காக வராண்டாவில் காத்திருந்த போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குவிந்து வருகின்றனர். இதனால் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த மூன்று வயது குழந்தை முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் சின்ன சவு பகுதியை சேர்ந்த சீனிவாசலு, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்றுள்ளார். இலவச தரிசன டோக்கன் பெற்ற சீனிவாசலு, தலைமுடி காணிக்கை செலுத்திவிட்டு பத்மநாப நிலையத்தின் முதல் மாடியில் பக்தர்கள் தங்குமிடத்தில் தரிசனத்துக்காக குடும்பத்தினருடன் காத்திருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சீனிவாசலுவின் 3 வயது சாத்விக் தடுப்பு கம்பி இடைவெளி வழியாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பதியில் தரிசனத்திற்காக காத்திருந்த போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.