சென்னை,
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகிய 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என தெரிவித்துள்ளார் .