
காஷ்மீரில் உள்ள பஹல்காமுக்கு சுற்றுலா வந்த ஆண்களிடம் மதத்தை கேட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்று உறுதி எடுத்த பிரதமர் நரேந்திர மோடி அதை செயலிலும் காட்டிவிட்டார். 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் பாகிஸ்தான் மோதல் நிறுத்தத்துக்கு முன்வந்தது. ஆபரேஷன் சிந்தூர் பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றதை பற்றி உலகுக்கு பிரகடனப்படுத்த இந்தியாவின் பெண் சக்திகளாக திகழும் 2 பேர் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேச களத்தில் இறக்கப்பட்டனர். வீர மங்கைகளான உயர் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷியும், விமானப்படை அதிகாரியான வியோமிகா சிங்கும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகளை மிக விளக்கமாக பத்திரிகையாளர் கூட்டங்களில் எடுத்து கூறினர். அவர்களது பேட்டியை டெலிவிஷனில் உலகமே வியப்புடன் பார்த்தது.
பத்திரிகைகளிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செய்திகள் பிரசுரிக்கப்பட்டன. இதில் சோபியா குரேஷி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவரது கணவரும் ராணுவத்தில் கர்னலாக பணிபுரிகிறார். சோபியா குரேஷி, அவரது குடும்பத்தில் 3-வது தலைமுறையாக ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இதுபோல இந்து குடும்பத்தை சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங்கும், அவரது பெயரின் பொருளான வானில் வாழும் ஒருவர் என்பதற்கேற்ப விமானப்படையில் பல சாதனைகளை செய்துவருகிறார். ஒட்டுமொத்த நாடே அவர்களின் மதங்களை பொருட்படுத்தாமல் எங்கள் வீர மங்கைகள் என்று புகழ் பாடியது.
தேசிய கொடிக்கும், ராணுவ சீருடைக்கும் சாதி ஏது?, மதம் ஏது? என்ற வகையில்தான், பேதம் பார்க்காமல் நாடே அவர்களை போற்றி கொண்டாடியது. ஆனால் மத்தியபிரதேச மாநில பா.ஜ.க. மந்திரி விஜய்ஷா மட்டும், 'பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்துவிட்டனர். நாம் அவர்களை அழிக்க அவர்களுடைய சகோதரியையே அனுப்பி பழி வாங்கிவிட்டோம்' என்று சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. சோபியா குரேஷியின் பெயரை அவர் நேரடியாக சொல்லாவிட்டாலும் மறைமுகமாக அவரை குறிப்பிட்டதால் மத்தியபிரதேச ஐகோர்ட்டு நேரடியாக இதை விசாரணைக்கு எடுத்து விஜய்ஷா மீது உடனடியாக வழக்கு தொடர உத்தரவிட்டது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்த நீதிபதி அதுல் ஸ்ரீதரன், சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று சொல்லியதன் மூலம் பிரிவினைவாத நடவடிக்கைகளை தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் விஜய்ஷா பங்கம் விளைவித்து இருக்கிறார் என்று தெரிவித்தார். தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று விஜய்ஷா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் அவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதேபோல சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ், வியோமிகா சிங் அரியானா மாநிலத்தில் உள்ள ஜாதவ் சாதியை சேர்ந்தவர் என்று சொல்லியதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மொத்தத்தில் ராணுவத்தினருக்கு இருக்கும் ஒரே அடையாளம் அவர்கள் நாட்டுக்காக பாடுபடும் வீரத்திலகங்கள் என்பது மட்டும்தான். அவர்கள் இந்த சாதி, இந்த மதம் என்று மக்களின் பார்வையிலும், மனதிலும் ஒருபோதும் இல்லை.