திருப்பதி : திருப்பதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, திருப்பதியில் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜூ பேசியதாவது:
மத்திய அரசு விலைவாசி உயர்வால் திண்டாடும் மக்கள் மீது காஸ் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. அதிகரித்துள்ள சுமையை தாங்குவோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மக்களை ஏமாற்றுவதாக உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக காஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்த தயாராக உள்ளனர். உயர்த்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.
மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வு குறித்து முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் பதிலளிக்க வேண்டும். மாநில மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு அளித்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் சிபிஎம் தலைவர்கள் டி.சுப்பிரமணியம், என்.மாதவ், ரவி, அக்பர், ரமேஷ், ராஜு, முரளி, சந்திரசேகர் நாயுடு, அனில், ஜெயராஜ், மது, நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post திருப்பதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.