திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேர் கைது

3 months ago 17

புதுடெல்லி,

ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான 'சிறப்பு புலனாய்வுக் குழு' (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ. 5 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. அதில் சி.பி.ஐ. தரப்பில் 2 அதிகாரிகள், ஆந்திரா காவல்துறை அதிகாரிகள் 2 பேர், உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சூழலில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது. தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு சோதனைகள் நடத்தியது.

இந்நிலையில் விலங்குகள் கொழுப்பினை நெய்யில் கலந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன்படி திண்டுக்கல் நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தை சேர்ந்த விபின் ஜெயின்,பொமில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட், தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதனால் இந்த வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article