
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இதில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கடந்த 11-ந்தேதி இரவில் தொடங்கி மறுநாள் 12-ந்தேதி இரவில் நிறைவடைந்தது. இதையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், சித்ரா பவுர்ணமி குறித்து கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி கடந்த 11-ந்தேதி இரவில் தொடங்கி மறுநாள் 12-ந்தேதி இரவில் நிறைவடைந்தது. கோவிலில் கடந்த 12-ந்தேதி அன்று ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 11 மற்றும் 12-ந்தேதிகளில் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அந்த இரண்டு நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 லட்சத்து 36 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 1 லட்சத்து 25 ஆயிரம் பிஸ்கெட்டுகள், 1 லட்சத்து 25 ஆயிரம் கடலை மிட்டாய்கள், 6 டன் தர்பூசணி பழங்கள், 50 ஆயிரம் வாழைப் பழங்கள் மற்றும் 60 லிட்டர் நீர்மோர் (4 டேங்கர் லாரி) கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு 400 தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.
முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருகை புரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிரமமின்றி விரைவு தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக மின்கல மகிழுந்து மற்றும் சிறப்பு தனி வழி அமைத்து தரிசனம் செய்து வைக்கப்பட்டது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.