
தென்காசி அருகே வல்லத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் மற்றும் இவரது மனைவி வெளிநாடு வாழ் இந்தியர்கள். இவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் பழக்கமானார். நீண்ட நாட்கள் பழகியதில் காளிதாஸ், தான் நில புரோக்கராக இருப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சில நிலங்களை அவர் மூலம் ராமச்சந்திரன் சுவாமி வாங்கி உள்ளார்.
இதன் பிறகு ராமச்சந்திரன் சுவாமி வாங்கிய ஒரு இடத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு காளிதாஸ் நான் விற்றுத் தருகிறேன் என்றும் எனது பெயருக்கு நீங்கள் பவர் எழுதிக் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார். அதன்படி அவரும் எழுதிக் கொடுத்துள்ளார். இதன் பிறகு அந்த இடத்தை காளிதாஸ் வேறு ஒரு நபருக்கு விற்று விட்டார். ஆனால் அதற்குரிய பணத்தை ராமச்சந்திரன் சுவாமிக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ராமச்சந்திரன் சுவாமியின் வங்கிக் கணக்கில் இருந்து அவரது ஒப்புதலின்படி ரூ.1 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரம் காளிதாஸ் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இடம் விற்றதில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 24 ஆயிரம் காளிதாஸ் தர வேண்டும். இதுகுறித்து கேட்பதற்காக ராமச்சந்திரன் சுவாமி பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.
இதுகுறித்து நேரில் சென்று அவரிடம் கேட்டபோது காளிதாஸ், அரிவாளால் வெட்டி விடுவேன் எனவும், காரை ஏற்றி கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரன் சுவாமி தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.