திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவின் முன்னால், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணி வகுத்துச்சென்றன. ஆண், பெண் கலைஞர்கள் நாட்டிய, நடன, இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பக்தர்கள் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். ஜீயர் சுவாமிகள் கோஷ்டி கானம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பாகாசூர வத அலங்காரத்தில் தனது உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
===================