
திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்த பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருந்தது. அவரது மகள் கல்லீரல் தானம் செய்ய முன்வந்திருந்த நிலையில், அறுவை சிகிச்சைக்காக ரூ.30 லட்சத்திற்கு மேல் பணம் தேவைப்பட்டது. அந்த தொகையை திரட்டும் பணியில் நடிகரின் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஷ்ணு பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தை நடிகர் கிஷோர் சத்யா தனது சமூகவலைதள பதிவின் மூலம் இன்று அறிவித்தார். நடிகரின் குடும்பத்தினருக்கு மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு பிரசாத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின்னர் நாளை (சனிக்கிழமை) இறுதி சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஷ்ணு பிரசாத் தமிழில் காசி மற்றும் மலையாளத்தில் மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.