"ஆபரேஷன் சிந்தூர்" - இந்தியா நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?

15 hours ago 3

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.

மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளன.

இந்நிலையில் இந்த தாக்குதலில் பயங்கராவதிகள் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பஹவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இரண்டு முக்கிய பயங்கரவாத முகாம்களில் மிகப்பெரிய தாக்குதல்கள் பதிவாகி உள்ளன, அங்கு ஒவ்வொரு தளத்திலும் சுமார் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய உளவுத்துறை தற்போது மற்ற இலக்கு முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருகிறது.

இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் சிந்தூர் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Entire Article