திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 1ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம சாஸ்திரத்தின்படி ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடப்பது வழக்கம். அதாவது யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி மற்றும் வருடாந்திர பிரம்மோற்சவம் விழாக்கள் நடைபெறுவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவம் இந்தாண்டு வரும் 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ம்தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் காலை, மாலை என இருவேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 1ம்தேதி (செவ்வாய்) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். எனவே அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அப்போது கோயில் முழுவதும் தூய்மை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் அன்று 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகு பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்று விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் 2ம் சனிக்கிழமையான நேற்று ஏழுமலையான் கோயிலில் 71,133 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35,502 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.28 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிருஷ்ண தேஜா கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.