திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை

3 months ago 14

அன்னமாச்சாரியாரின் பக்தியையும், திருமலையின் சாளக்கிராம சாந்நித்தியத்தைப் பற்றியும் சென்ற இதழில் கண்டோம் அல்லவா.. இந்த தொகுப்பில் மேலும் பலவற்றைப் பற்றி காணலாம்.

சாலையில் பயணம்

லட்சுமி நரசிம்மர் சந்நிதானத்தை கடந்ததும், சுமார் 25 படிகள் வரை கீழே இறங்கிச் செல்லவேண்டும். அதன் பிறகு, திருமலையில் இருந்து வாகனங்கள் கீழே இறங்கிவரும் வழியில், அதன் எதிர்திசையில் நாம் பயணத்தைத் தொடங்க வேண்டும். வாகனங்கள் இறங்கி வரும் பாதை என்பதால், சாலைகள் சரிவாக இருக்கும் (Road Slop) ஆகையால் வாகனங்கள் வேகமாக வர வாய்ப்புகள் அதிகம். கவனமாக பயணிக்க வேண்டும். இங்கிருந்து பார்த்தால், ஒட்டுமொத்த திருப்பதி நகரமும் மிக சிறியதாக கண்களுக்கு தெரியும். அதேபோல், இரவு நேரமாக இருந்தால், விளக்குகளால் ஜொலிஜொலிக்கும். பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படாமல் பயணத்தை மேற்கொள்ள, சாலைகளின் ஓரத்தில், தகரக் கொட்டகைகள் தேவஸ்தானம் சார்பில் அமைத்திருக்கிறார்கள்.

ஆகையால், சிரமம் இன்றி இவ்விடத்தில் பயணிக்கலாம். மேலும், இந்த இடத்தில் இருந்து 4 கி.மீ., பயணித்தால், திருமலையை அடைந்துவிடலாம்.

மொகாலிமிட்டா கோபுரம்

படியேறிய களைப்பில், சற்று தூரம் அதாவது ஒரு 2 கி.மீ., தூரம் சாலையில் கடந்தோமேயானால், திருமலைக்கு செல்ல கடைசி கோபுரமான, “மொகாலிமிட்டா கோபுரம்’’ என்னும் இடத்தை அடையலாம். இந்த இடத்தில் சற்று குளிர் தெரிகிறது. இந்த மொகாலிமிட்டா கோபுரத்தில் இருந்து நாம் மீண்டும் படிகளில் ஏறித்தான் திருமலைக்கு செல்ல வேண்டும்.

மொகாலிமிட்டா கோபுரத்தில் இருந்து திரும்பிப்பார்த்தால் `U’ வடிவிலான மிக அழகாக சரிவான (Road Slop) நாம் கடந்து வந்த சாலையினை பார்க்கலாம். புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடம். மொகாலிமிட்டா கோபுரத்தின் உள்ளே சென்றதும், சில்லென்று காற்று வீசுகிறது. ஆகையால், சற்று நேரம் அமர்ந்துவிட்டு, பயணத்தை தொடங்கலாம்.

மொகாலிமிட்டா கோபுரத்தை கடந்து சென்றவுடன், படிகள் எப்படி இருக்கும்? சுற்றுச்சூழல் எப்படி இருக்கும்? லொகேஷன் எப்படி இருக்கும்? என்கின்ற ஆர்வம் தோன்றுகிறது. வாருங்கள்.. பயணத்தை தொடங்கலாம். “ஓம் நமோ.. வெங்கடேசாய…’’

சற்றுக் கடினம்

மொகாலிமிட்டா கோபுரத்தினுள் நுழைந்ததும், பெரிய பெரிய படிகள் இருக்கின்றன. அந்த படிகளில் பொடிக்கற்கல் சிதறிக்கிடக்கின்றன. இந்த பொடிக்கற்கல், மலையில் இருந்து மழைக்காலங்களில் தண்ணீருடன் கலந்து படி வழியாக கீழே வழிந்தோடுகின்றன. ஆகையால், நாம் இந்த இடத்தை கடப்பது சற்று கடினம்தான்.

ஆனால், மிக அருமையான லொகேஷன். உயரமான அறியப்படாத, காணப்படாத பல மரங்களும், செடிகொடிகளும் நிறைந்திருக்கும் வனப்பகுதியாகும். இவைகளை ரசித்தப்படி படிகளை ஏறும் போது, காலில் குத்தும் அந்த பொடிக்கற்களின் வலி தெரியவே தெரியாது.

துணிப்பைகளை இலவசமாக அனுப்பலாம்

பலரும், தாங்கள் கொண்டுவந்த துணிப்பைகளை சுமக்க முடியாமல் தலையின் மீது வைத்தவாறு நடைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இத்தகைய பயணத்தை முற்றிலுமாக தவிர்க்கலாம். ஆம்! நாம் எடுத்துச் செல்லும் துணிப் பைகளை, இலவசமாக அலிபிரில் (கீழ் திருப்பதி) உள்ள “Free Luggage Delivery Center” என்னும் இலவசக் கூடாரத்தில் வைத்துவிட்டால் போதும், அவர்களே மேல் திருப்பதியில் (திருமலை) இலவசமாக டெலிவரி செய்துவிடுகிறார்கள்.

மேலும், நாம் சொன்னதுபோல் செருப்புகளை அணிந்து பயணத்தை மேற்கொள்ளாது, செருப்புகளை பெட்டியில் வைத்து “Free Luggage Delivery Center”-ல் அனுப்பிவிடலாம். மிகவும் பயனுள்ள இந்த டெலிவரி சென்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு முக்கிய செய்தி ஒன்று உள்ளது.

பைகளுக்கு ஏற்றாற் போல் சிறிய அளவிலான பூட்டினை பூட்டிய பைகளை மட்டுமே டெலிவரி சென்டரில் வாங்கிக் கொள்வர். ஆகையால், பைகளைப் பூட்ட சிறிய அளவிலான பூட்டினை எடுத்துச் செல்வது நல்லது. மறக்கும் பட்சத்தில், டெலிவரி சென்டர் அருகிலேயே சிறிய அளவிலான பூட்டு விற்கப்படுகிறது அதனை வாங்கிப் பூட்டிக் கொள்ளலாம்.

பெட்டிக் கதை

முன்னொரு காலத்தில் இந்த டெலிவரி சென்டர் எல்லாம் கிடையாது. துணிப்பெட்டிகளை தலையில் சுமந்து கொண்டுதான் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அப்படி ஒரு முறை, சின்ன குழந்தையை இடுப்பில் சுமந்தபடி மனைவியும், இரு கைகளில் துணிப்பெட்டிகளை சுமந்தபடி கணவனும், திருமலைக்கு நடைபாதை வழியாக பயணம் மேற்கொண்டனர்.

இடுப்பில் இருக்கும் குழந்தையை சுமந்து கொண்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் மனைவி தவிக்கிறாள். குழந்தையை, கணவனிடத்தில் கொடுக்கவும் அவளுக்கு சங்கடமாக இருக்கிறது, காரணம் கணவனிடத்திலும் துணிப்பைகள். ஜரிகை வேட்டி, அங்கவஸ்திரம், நெற்றியில் திருநாமம் ஆகியவற்றை தரித்துக் கொண்டு, ஆறடி உயரத்தில் ஒரு நபர் அந்த கணவனிடத்தில் அருகில் வந்து, “இதோ பாருப்பா… பெட்டியை என்னிடத்தில் கொடு… நான் காலி கோபுரம் அருகே காத்துக்கொண்டு இருக்கேன். நீ அங்கே வந்து உன் பெட்டியை எடுத்துக் கிட்டு போ..’’ என்கிறார்.

முன் பின் தெரியாத நபரிடத்தில், எப்படி பெட்டியை கொடுப்பது? என்ற சந்தேகம் கணவனுக்கு. மனைவிக்கோ மகிழ்ச்சி… “அப்பாடா… உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டது. குழந்தையை கணவனிடத்தில் கொடுத்துவிடலாம் என்று!

“எப்பா… நம்புப்பா… பொட்டியை கொடு. மனைவி கையில் இருக்கும் குழந்தையை வாங்கிக்க. காலி கோபுரம் வரைக்கும் கஷ்டமாக இருக்கும். அதுக்கு அப்புறம் எளிமையா நடந்து போய்டலாம்.’’ என்று அந்த நபர் கூறுகிறார். கணவனுக்கோ பெட்டியை அந்த நபரிடம் கொடுக்க மனமில்லை. மனைவி தரும்படி வற்புறுத்துகிறாள். ஆகையால், பெட்டியை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு, மனைவி இடத்தில் இருக்கும் குழந்தையை பெற்று, தான் சுமந்து கொண்டு பயணத்தை தொடர்கிறான். சிறிது நேரத்திற்கு பின்.. கண்களுக்கு எட்டிய வரை பெட்டியை பெற்ற நபர், கணவன் – மனைவி இருவருக்கும் தெரியவில்லை. பெட்டி தொலைந்துவிடுமோ? என்கின்ற அச்சம், கணவனுக்கு.

“உன் வற்புறுத்தலின் பெயரிலேயே நான் அவரிடத்தில் பெட்டியை கொடுத்தேன். இப்போது பாரு பெட்டியை எடுத்துச் சென்றவரை காணவில்லை.’’ என்று மனைவியை கடிந்து கொள்கிறான். மனைவிக்கும் அச்சம் ஏற்படுகிறது.

ஆனால், சொன்னது போலவே, பெட்டியை அருகில் வைத்துக் கொண்டு, காலி கோபுரத்தில் காத்துக் கொண்டிருக்கிறார், அந்த நபர். இதனைக் கண்ட தம்பதிகளுக்கு மகிழ்ச்சி. அந்த நபர் அருகில் சென்ற கணவன் – மனைவி இருவரும், பெட்டியை பெற்றுக் கொண்டனர்.

“சரி.. நான் கிளம்புகிறேன்’’ என்று உதவிய நபர் சொல்லி திரும்பும்போது,

“உங்கள் பெயர் என்ன? நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?’’ என்று தம்பதிகள் கேட்டதும்,

“நான் இங்கதான் வசிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டார், அந்த நபர். தம்பதிகள் எங்கு தேடியும் பெட்டியை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தவரை காணவில்லை. கணவன் – மனைவி இருவருக்கும் ஆச்சரியம்.  நமக்கு உதவியது, சாட்சாத் அந்த ஏழுமலையான்தான் என்று எண்ணி “கோவிந்தா…கோவிந்தா….’’ என கோஷமிட்டு, மீண்டும் தங்களின் பயணத்தை தொடங்கினர்.

துணிப் பெட்டியை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, என் அம்மா கூறிய இந்த கதை எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அந்த கணவன் – மனைவி வேற யாருமில்லை, எனது அம்மா – அப்பாதான். மலையப்ப ஸ்வாமி, பக்தர்களுக்காக வேண்டிய வரத்தை தருகிறார் என்பது ஒருபுறம் என்றால், இதுபோல பக்தர்கள் படும் துயரத்தைக் கண்டு நிற்காமல் இறங்கி ஓடோடி வருகிறார் என்பது மறுபுறம்.

கடைசிப் பயணம்

இன்னும் 2 கி.மீ., தூரம் படிகளை கடந்து சென்றால், ஏழுமலையப்பனின் இடத்திற்கு சென்றுவிடலாம். கடைசி சுமார் ஒரு 350 படிகள் மட்டுமேதான் நாம் கடக்க வேண்டி உள்ளது. நம் மனது, 350 படிகள்தானே என எளிமையாக என்னும். ஆனால், இவைகளை கடப்பதுதான் சவால்கள்! காரணம், பல படிகளை ஏறி வந்த களைப்பால், இந்த கடைசி 350 படிகளை கடப்பது சற்று கடினமாகதான் இருக்கும்.

மனதில், ஸ்ரீனிவாசனை நினைத்துக் கொண்டு, ஐம்பது ஐம்பது படிகளாக ஏறி நம் திருமலை பயணத்தை நிறைவு செய்யலாம். மேலும், நாம் முன்பே கூறியதை போல், குளுக்கோஸ் ஜூஸ் பற்றிய செய்தியினை பின்னர் வரும் தொகுப்பில் கூறுகிறோம் என்று சொன்னோமே அல்லவா! அதாவது, அலிபிரியில் குளுக் கோஸ் ஜூஸின் விலை பத்து ரூபாய்.

அதன் பின், காலி கோபுரத்திற்கு சற்று அருகில் வரும்போது, குளுக் கோஸ் ஜூஸின் விலை, பதினைந்து ரூபாயாக விலை ஏற்றம் செய்து விற்கப்படுகிறது. காலி கோபுரம் கடந்தவுடன் ஒரு விலையும், பேடி ஆஞ்சநேயர் சந்நதியில் மேலும் கூடுதலான விலையில் விற்கப்படுகின்றன.

கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லசெல்ல எந்த பொருட்கள் வாங்கினாலும், விலையானது ஏற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, குளுக்கோஸ் ஜூஸின் விலையானது தாறுமாறுதான். ஆகையால், சிரமத்தை எண்ணாமல், நடைப்பயணம் மேற்கொள்ளும் போது, மறக்காமல் தங்களின் பைகளில் குளுக் கோஸ் ஜூஸினை தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு, பயணத்தை மேற்கொள்வது நல்லது.

(பயணம் தொடரும்…)

The post திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை appeared first on Dinakaran.

Read Entire Article