
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரில் காவல் துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்ததின் விளைவாக சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகளின் நடமாட்டங்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் எந்த சமூக விரோதிகளாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 4 மாதத்தில் திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் 12 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டும் (2024) அதற்கு முந்தைய ஆண்டும் (2023) இதே காலக்கட்டத்தில் தலா 11 கொலைகளும், 2022-ம் ஆண்டில் 15 கொலைகளும் நடைபெற்றுள்ளன. இவற்றை ஒப்பிடும் போது, முதல் நான்கு மாதத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. 2022-ம் ஆண்டை ஒப்பிடும் போது, 3 வழக்குகள் குறைவாகும்.
அதே போன்று, கடந்த 2023-ம் ஆண்டு மொத்தம் 44 கொலைகளும், 2024-ம் ஆண்டு 35 கொலைகளும் நடந்துள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைவாகும். மேலும் 2021-ம் வருடம் 52 கொலை வழக்குகளும் 2022-ம் ஆண்டு 44 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளன. எனவே மேற்கண்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் கொலைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.
கடந்த நான்கு மாதத்தில் எந்தவித பழிவாங்கும் கொலைகளோ, சாதி ரீதியான அல்லது ரவுடிகள் கொலையோ நடைபெறவில்லை. அற்ப காரணங்களுக்காகவே இந்த 12 கொலைகளும் நடந்துள்ளன. வாய்தகராறு மற்றும் சிறு தகராறின் காரணமாக 5 கொலையும், முறையற்ற மற்றும் தகாத தொடர்பின் காரணமாக 2 கொலைகளும், பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக 2 கொலைகளும், சொத்து சம்பந்தமாக 2 கொலைகளும், குடும்ப பிரச்சினையின் காரணமாக மகன் தகப்பனை கொலை செய்ததாக 1 கொலையும் நடைபெற்றுள்ளன. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து எதிரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே எதிர்பாராமல் நடந்த கொலைகளாகும். இவற்றில் 1 கொலை வழக்கு மட்டும் குடிகாரர்களுக்கிடையில் மதுவை பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக ஏற்பட்ட வாய்தகராறினால் நடந்ததாகும்.
அதே போன்று திருநெல்வேலி மாநகரில் கடந்த 4 மாதத்தில் 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் குடும்ப பிரச்சினையின் காரணமாக 2 கொலைகளும், தகாத உறவின் காரணமாக 2 கொலைகளும், சொத்து பிரச்சினை மற்றும் வாய் தகராறு காரணமாக தலா ஒரு கொலையும் நடந்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக காவல் துறையினர் எப்போதும் அன்றாட வாழ்வில் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 24,265 நடைரோந்துகள் செய்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் காவல் துறையினரை எளிதில் அணுகும் வகையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலரை நியமித்து "கிராமத்துக் காவல்" என்ற புதிய திட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இக்கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட காவலர் வாரத்தில் இரண்டு நாட்கள் அக்கிராம மக்களை நேரில் சந்தித்து பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், காவல் துறையினர் 16,233 பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடம் நடத்தியுள்ளனர். குற்றத்தடுப்பு மற்றும் குற்றத்தை கண்டுபிடிக்கத்தக்க வகையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் புதிதாக 7,077 கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டுள்ளது. ஆன்லைன் புகார் மற்றும் காவல் நிலையத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களும் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு காவலர் என்ற விகிதத்தில் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த வருடத்தில் மொத்தம் 12 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 44 எதிரிகளுக்கு ஆயுள்தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது அதில் ஒருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
"பாசக்கார பூமியில் நடந்த பயங்கர சம்பவங்கள் நெல்லையில் 4 மாதத்தில் 19 படுகொலைகள், மாநகரில் 7 பேரும், புறநகரில் 12 பேரும் பலி" என்ற செய்தி 1.5.2025-ம் தேதி வெளிவந்த தினசரி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக நடைபெற்ற நிகழ்வுகளை மிகைப்படுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தவறாக பரபரப்பான செய்தியாக நாளிதழில் குறிப்பிட்டுள்ளது போன்று, திருநெல்வேலி மாவட்டம் எவ்வித பதட்டமுமில்லாமல் அமைதியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.