நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு

13 hours ago 5

சென்னை,

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்திருக்கிறது. மாணவர்கள், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Read Entire Article