சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்ததுடன், நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை அப்பகுதிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டார். கடந்த 7ம் தேதி அன்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி 10ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
அது பின்னர் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளை நோக்கி வரத் தொடங்கி தற்போது மன்னர் வளைகுடா பகுதியில் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி நிலைமையை கேட்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
நேற்று முன்தினம் முதல் பூண்டி, பிச்சாட்டூர் மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்களில் இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று (13ம் தேதி) செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சேத்தியார்தோப்பு ஏரிகளில் இருந்து உபரி திறப்பது குறித்து உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்ட பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று சிவப்பு அலர்ட் விடுத்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு, தாமிரபரணி ஆற்றில் 50,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் வெள்ள அபாயம் குறித்து 11.75 லட்சம் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, இராமநாதபுரம், சேலம், விருதுநகர், சிவகங்கை, தேனி, கரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார். முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி நிவாரண பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அலுவலர்களையும் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா மற்றும் காணொலிக்காட்சி வாயிலாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் மோகனசந்திரம், கூடுதல் ஆணையர் (வருவாய் நிர்வாகம்) எஸ்.நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் கனமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் விரைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.