
நெல்லை மாவட்டம், மருதம்புதூர், தெற்கு தெருவை சேர்ந்த பொன்ராஜேஸ்வரன் (வயது 26) என்பவர் வீரவநல்லூருக்கு செங்கல் லோடு டிப்பர் லாரியில் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தபோது, தென்திருப்பவனம் பஸ் ஸ்டாண்டு அருகே லாரியை நிறுத்திவிட்டு லாரியின் டயரை செக் பண்ணி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ரோட்டில் 4 கிராம் 900 மில்லி தங்க சங்கிலி கேட்பாரற்று கிடந்துள்ளது. அதை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் முக்கூடல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், பொன்ராஜேஸ்வரனை எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று (13.5.2025) நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
இதேபோல் நெல்லை மாவட்டம், பணகுடி, தளவாய்புரத்தை சேர்ந்த பெருமாள் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 40), பணகுடி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் 5.5.2025 அன்று பணகுடியில் இருந்து காவல்கிணறு நோக்கி சவாரி சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரோட்டில் ரூ.3 லட்சம் பணம் மற்றும் செல்போன் கேட்பாரற்று கீழே கிடந்துள்ளது. அதை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் பணகுடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், முத்துகிருஷ்ணனை எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று (13.5.2025) நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.