நெல்லை: ஒன்றிய அரசின் சார்பில் இந்தியாவின் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2024ம் ஆண்டுக்கு விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழில் ‘திருநெல்வேலி எழுச்சியும், வஉசியும் -1908’ என்ற ஆய்வு நூலை எழுதிய பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று எழுத்தாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரான ஏ.ஆர்.வெங்கடாசலபதியின் சொந்த ஊர் சென்னை.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 1995 முதல் 2000 வரை வரலாற்றுத் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். தொடர்ந்து 2001 ஜூன் முதல் சென்னையில் உள்ள எம்ஐடிஎஸ்சில் ஆசிரியர் உறுப்பினராக பணியாற்றினார். 2007ல் சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான விகேஆர்வி ராவ் பரிசு வழங்கப்பட்டது. தனது ‘திருநெல்வேலி எழுச்சியும், வஉசியும் -1908’ என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பேராசிரியர் ஏ.ஆர் வெங்கடாசலபதி கூறுகையில், ‘எதிர்பார்க்காத போது இந்த விருது கிடைத்துள்ளது.
30 வருட ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். வஉசியின் தன்னலமற்ற தியாகம் விடுதலைக்கான அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறேன். மேலும் பெரியார் வாழ்க்கை வரலாற்றை ஆங்கில நூலாக எழுதி வருகிறேன்’ என்றார். விருது பெற்ற வெங்கடாசலபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்து்ளளார்.
The post திருநெல்வேலி எழுச்சியும், வஉசியும் 1908 ஆய்வு நூல் தேர்வு; சென்னை பேராசிரியருக்கு சாகித்ய அகாடமி விருது: 30 ஆண்டு ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசு என பெருமிதம் appeared first on Dinakaran.