திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

2 weeks ago 5

காரைக்கால்,

காரைக்காலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு திருத்தலத்தில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தற்போது தீபாவளி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று சனிக்கிழமை என்பதாலும் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்றைய தினம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. நளன் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், காரைக்கால் எஸ்.பி. பாலசந்தர் தலைமையிலான போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் நாளை ஞாயிறு விடுமுறை என்பதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Read Entire Article