
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின்படி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று, மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்த பேரணியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரசண்ணகுமார் (மேற்கு) மற்றும் விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் போலீஸ் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளுடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலிருந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மாவட்ட நூலகம் வழியாக மீண்டும் ஆயுதப்படை மைதானத்திற்கு சென்று பேரணியை நிறைவு செய்தனர்.