
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலாவது நடைபெற்ற சேப்பாக் - மதுரை இடையிலான ஆட்டத்தில் சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அதே மைதானத்தில் நடந்த 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் (0), சுரேஷ் லோகேஷ்வர் (3) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாலசுப்பிரமணியம் சச்சின், விஷால் வைத்யா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் பாலசுப்பிரமணியம் சச்சின் சேலம் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டிரிக்கு விரட்டி, தனது அதிரடி சதத்தை பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய விஷால் வைத்யா (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷாருக்கான், சச்சினுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் கோவை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. அணியில் சார்பில் பாலசுப்பிரமணியம் சச்சின் (116) ரன்களும், ஷாருக்கான் (45) ரன்களும் எடுத்தனர். சேலம் அணி சார்பில் சன்னி சந்து, பொய்யாமொழி ஆகியோர் 2 விக்கெட்டுகளும், மொகமது, தேவ் ராகுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சேலம் அணி விளையாடியது.
தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் (5) ரன்களிலும், ஈஸ்வர் (29) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் ராஜகோபால், எஸ்.அபிஷேக் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர். இருப்பினும் இந்த ஜோடியின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நிதிஷ் ராஜகோபால் 22 ரன்களிலும், எஸ்.அபிஷேக் 32 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்து வந்த சேலம் அணியின் வீரர்களும், கோவை அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இறுதியில் 19.1 ஓவர்கள் முடிவில் சேலம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. அணி சார்பில் வித்யுத் 5 விக்கெட்டுகளையும், திவாகர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.