கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை புதிய கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

2 weeks ago 10


சென்னை: கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை, புதிய கல்லூரி கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்துதல், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு கல்வி சார்ந்த அறப்பணிகளையும் சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் எழும்பூர், சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 1,035 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் கடந்தாண்டு ரூ.1.78 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மேலும், இப்பள்ளிக்கு கூடுதலாக ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், 5 ஆய்வங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் சார்பில் கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இக்கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு கடந்த 23.12.2024 அன்று அடிக்கல் நாட்டினார். வரும் கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் புதிய கட்டடத்தில் நடைபெறும் வகையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.

The post கோயில்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம், கூடுதல் வகுப்பறை புதிய கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article