பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியார்- வால்பாறை மலைப்பாதையில் விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால், வறட்சி நிலவுகிறது. இதன்காரணமாக, நீர் நிலைகளை தேடி அடர்ந்த காட்டு பகுதியிலிருந்து யானை, வரையாடு, கடமான், குரங்கு, காட்டுபன்றி உள்ளிட்ட பல விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதில், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, நவமலை, சர்க்கார்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அதிகமாக இடம் பெயர்ந்து வருகின்றன. அதிலும் பெரும்பாலும், ஆழியார்-வால்பாறை மலைப்பாதையை கடந்து நீர்நிலைகளை தேடி செல்கிறது.
இதனால், சிலநேரத்தில் வாகனங்களில் அடிப்பட்டு விலங்குகள் இறக்கும் சம்பவம் நடக்கிறது. இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் ரோட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். மீறி வாகனங்களில் வெகமாக சென்று, அதன் மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்திற்குள் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒற்றை காட்டு யானை உலா
ஆழியார் அடுத்த நவமலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை அடிக்கடி ஆழியார் ரோட்டில் உலா வருகிறது. அந்த யானை ரோட்டோரம் உள்ள தாவரங்களை உண்டு, ஆழியார் அணை பின்புறம் தண்ணீர் குடித்துவிட்டு செல்கிறது. சிலநேரத்தில், அந்த வழியாக வாகனங்கள் வரும்போது, வாகனத்தை வழிமறித்து நிற்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
The post ஆழியார்- வால்பாறை மலைப்பாதையில் விலங்குகள் நடமாட்டம்: வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்: வனத்துறையினர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.