திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழாவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

3 months ago 8

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். அதேபோல், திருப்போரூர் முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், வல்லக்கோட்டை, குன்றத்தூர், சிறுவாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னை அருகே முருகன் கோயில்களுள் புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் இன்று தை கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பரணி நட்சத்திர தினமான நேற்று முதல் இன்றுவரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஞாயிறு இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா நடந்தது. இந்நிலையில், தை கிருத்திகை தினமான இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடித்து, சரவண பொய்கை குளத்தில் நீராடி, வேல் தரித்து, பால், புஷ்ப, பன்னீர் உள்பட பல்வேறு காவடிகளை சுமந்தபடி அரோகரா கோஷங்களுடன் 4 மாட வீதிகளில் வலம் வந்து முருகனை தரிசித்தனர்.

இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும், இன்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். முன்னதாக, இன்று அதிகாலை சரவணபொய்கை குளத்தில் நீராடி, முருகப்பெருமானை தரிசித்து, பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவரை அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். திருப்போரூர் முருகன் கோயிலில் இன்றிரவு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா நடைபெறுகிறது. அதேபோல், முருகப்பெருமானின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து, தங்க, வைர ஆபரணங்களை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வருகிறார். மேலும் குன்றத்தூர், வல்லக்கோட்டை மற்றும் சிறுவாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் இன்று தை கிருத்திகை முன்னிட்டு பல்வேறு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை தரிசித்து வருகின்றனர். அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த கோயில் நிர்வாகம் செய்துள்ளன. மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார முருகன் கோயில் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதங்களை பலர் வழங்கினர்.

 

The post திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழாவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article