சிவகாசி, ஏப்.3: சிவகாசி சட்ட மன்ற தொகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.46.50 கோடியும், சிவகாசி ரிங்ரோடு 2ம் கட்ட பணிகளுக்கு ரூ.250 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகாசி தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சிவகாசியில் சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார்புரம் சாலை, திருத்தங்கல் ஆகிய பகுதியில் 3 ரயில்வே கேட் உள்ளது. இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகாலமாக பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, சிவகாசி எம்எல்ஏ அசோகன் தொடங்கி வைத்தனர். தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ரயில்வே மேம்பாலம் இன்னும் ஒருசில மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு சிவகாசி தொகுதி மக்களிடம் இருந்தது. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிந்த உடன் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அசோகன் எம்எல்ஏ கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.46 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதனால் சிவகாசி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றித்தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சிவகாசி தொகுதி எம்எல்ஏ அசோகன் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிவகாசியில் பெரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வயைில் ரிங்ரோடு அமைக்க வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் சிவகாசி-விருதுநகர் சாலையில் வடமலாபுரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே ரூ.120 கோடி மதிப்பீட்டில் ரிங்ரோடு அமைக்கும் முதல் கட்ட பணிகளை அமைச்சர் தங்கம்தென்னரசு, சிவகாசி தொகுதி எம்எல்ஏ அசோகன் தொடங்கி வைத்தனர். இந்த ரிங்ரோடு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 2ம் கட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. 2ம் கட்ட ரிங்ரோடு விருதுநகர் -சிவகாசி சாலை, சாத்தூர்-சிவகாசி சாலை இணைக்கப்பட உள்ளது.
இதேபோல் சிவகாசி-விருதுநகர் சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றி அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கி தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அசோகன் எம்எல்ஏ கூறும்போது, ‘‘என்னுடைய கோரிக்கையை ஏற்று திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.46.50 கோடியும் சிவகாசி ரிங்ரோடு 2ம் கட்ட பணிகளுக்கு ரூ.250 கோடியும் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் எனது தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
The post திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.46.50 கோடி; ரிங்ரோடு பணிகளுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.