சிவகாசி: திருத்தங்கல் செல்லியாரம்மன் ஊருணியில் பச்சை, மஞ்சள் கலரில் ஜொலிக்கும் சிறுவர் பூங்காவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் வடக்குரத வீதியில் உள்ள செல்லியாரம்மன் ஊருணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ஊருணி கடும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் கழிவுநீர் தேங்கியிருப்பதாலும் சுருங்கி பெரும் துர்நாற்றம் வீசியது. கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கழிவுநீர் ஓடையாக மாறி இருந்தது. சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊருணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க முடிவு செய்தது. இதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.61 லட்சம் நிதியும் ஒதுக்கியது.
சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2022ல் செப்டம்பர் மாதம் 28ம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. பூமிபூஜை போட்ட ஒருசில நாட்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றது. நிர்வாக காரணங்களால் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது சிறுவர் பூங்கா பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கின்றது. பச்சை மஞ்சள் கலரில் சிறுவர் பூங்கா அழகாக காட்சியளிப்பதால் அந்த வார்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தங்கல் மக்கள் கூறும்போது, சிவகாசி மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள், மக்களுக்கு மனநிறைவு தரும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருத்தங்கல் செல்லியாரம்மன் வார்டில் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கின்றது. பூங்கா பச்சை, மஞ்சள் நிறங்களில் வண்ணம் பூசி கண்ணுக்கு விருந்து படைத்து மனநிறைவு தருகின்றது. எங்களது கோரிக்கையை ஏற்று பூங்கா அமைத்து கொடுக்க உதவிய அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றனர்.
The post திருத்தங்கல் செல்லியாரம்மன் ஊருணியில் பூங்கா திறப்பு விழா எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.