ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி… திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

4 hours ago 1

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 10.57 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலின் 6 திருக்கோயில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், பக்தர்கள் அதிகளவில் வருகைதரும் திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவினை ஏற்படுத்தி, பக்தர்களின் அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் திருக்கோயில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் 28.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.

அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதலமைச்சர் அவர்களால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 10 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 11,712 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட 7,006 கோடி ரூபாய் மதிப்பிலான 26,695 பணிகளில் இதுவரை 3,526 கோடி ரூபாய் மதிப்பிலான 13,541 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும், இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் கைங்கர்யம் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த 6 திருக்கோயில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.

The post ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி… திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article