திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலைய வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்னி பஸ்களால் பயணிகள், பக்தர்கள் சிரமம்

1 week ago 3

திருச்செந்தூர் : திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளிவரும் பாதையை மறைத்து ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பயணிகள் மற்றும் பக்தர்கள் சிரமமடைகின்றனர். எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தில் வந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கார், வேன் மற்றும் சுற்றுலா பேருந்தில் வரும் பக்தர்கள் கோயிலில் நாழிக்கிணறு நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்கு செல்வர்.

ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் மூலமாக வரும் பக்தர்கள் பகத்சிங் பேருந்து நிலையத்திலும், ரயில்வே நிலையத்திலும் இறங்கி ஆட்டோ, கார்களில் கோயில் செல்வார்கள்.

பேருந்து மற்றும் ரயிலில் வரும் ஏழை பக்தர்கள் இங்கிருந்து மாற்று பேருந்து மூலம் கோயிலுக்கு செல்கின்றனர்.

மேலும் நகருக்குள் அதிக அளவிலான போக்குவரத்து நெருக்கடியால் வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் பகத்சிங் பேருந்து நிலையத்தில் தான் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து சுற்று பேருந்துகள் மூலம் ஆண்கள் ரூ.10 கட்டணத்திலும், பெண்கள் இலவசமாகவும் கோயில் வாசல் வரை பயணிக்கின்றனர்.

இதனால் பகத்சிங் பேருந்து நிலையம் அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து செல்வதாலும், சுற்று வட்டார பொதுமக்கள் பயணத்தினாலும் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

வழக்கமாகவே பகத்சிங் பேருந்து நிலையத்தில் உள்ளே நுழையும் அனைத்து பேருந்துகளும் தூத்துக்குடி சாலையில் உள்ள வடக்குப்பகுதி வழியாக உள்ளே வந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தெற்குப்பகுதியில் வெளியே வரும் வாசல் வழியாக புறப்படுகிறது. இதனால் பேருந்தில் ஏற நடந்து வருபவர்கள் கூட தெற்குப்பகுதி நுழைவாயிலில் நின்று பேருந்தை நிறுத்தி ஏறி செல்கின்றனர்.

இந்நிலையில் தெற்கு வாசல் உள்ளே நாள்தோறும் மாலை முதல் இரவு வரை சென்னை, கோவை பெங்களூரு என பெரு நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் அந்தப்பகுதியில் அங்கும், இங்குமாக வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் வழக்கமாக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும் வெளியே வருவதற்கு சிரமமடைகின்றன.

மேலும் ஆம்னி பேருந்துகள் புறப்படும் சில மணி நேரத்துக்கு முன்பாகவே கண் கூசும் அளவுக்கு விளக்கை எரியவிட்டு அங்கே நிறுத்தப்படுவதால் வெளியே பேருந்துகள் வருவது தெரியாமல் சாதாரண பேருந்துகளில் ஏற பயணிகள் சிரமமடைகின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து வழக்கமான தடப்பேருந்துகள் வெளியே வருவதற்கான வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்னி பேருந்து நிலையம் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு நகராட்சி சார்பில் ரூ.29 கோடி செலவில் புதிய நவீன பேருந்து நிலையமும் அமைக்கப்பட உள்ளது என நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. இத்திட்டத்தை விரைவில் துவக்கி செயல்படுத்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலைய வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்னி பஸ்களால் பயணிகள், பக்தர்கள் சிரமம் appeared first on Dinakaran.

Read Entire Article