திருச்செந்தூர் ஆவுடையார்குளக்கரைகளில் படித்துறைகள் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

2 months ago 8


திருச்செந்தூர், ஜன.7: திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தின் கரைகளில் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவ நதியான தன்பொருநை என்னும் தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பாபநாசம் அணையில் இருந்து வரும் நீரானது தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசனத்திற்கு பயன்படுகிறது. இதில் தென்காலில் கடைசிக் குளங்களாக திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மற்றும் எல்லப்பநாயக்கன் குளங்கள் ஆகியன உள்ளன. இக்குளங்களே திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, கால்நடைகளின் தாகத்தையும் தீர்த்து வைப்பது மட்டுமின்றி விவசாய நிலங்களின் நீர் ஆதாரமுமாக உள்ளது.

இதில் ஆவுடையார் குளம் 210 ஏக்கர் பரப்பளவும், ஆறரை அடி கொள்ளளவும் கொண்டது. குளத்தின் நீளம் சுமார் 5 கி.மீ. சுற்றளவு ஆகும். இக்குளத்தின் மூலம் சுமார் 250 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இக்குளத்தில் ஒரு பாய்மான மதகும், நான்கு மறுகால் ஷட்டரும் உள்ளன. முந்தைய காலங்களில் திருச்செந்தூர் குடியிருப்புவாசிகள் மட்டுமில்லாது திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் குளிப்பதற்கு பேருதவியாக இருந்தது ஆவுடையார்குளமாகும். கடந்த மாதம் பெய்த மழை மற்றும் அணைகளில் இருந்து வரப்பட்ட நீரினால் இக்குளம் தற்போது நிரம்பி உள்ளது. ஆனாலும் பொதுப்பணித்துறையினர் முறையாக குளத்தின் கரைகளை பராமரிக்காததால் தண்ணீர் இருந்தும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

நிரந்தரத்தீர்வு
திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தின் கிழக்கு பக்கம் உள்ள படித்துறைகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. பிறகு முறையாக மேற்கொள்ளப்படாத பராமரிப்பால் குளத்தின் கரைகளில் முட்புதர்கள் சூழ்ந்து நடந்து செல்வதற்கு பாதை இல்லாததால் அங்கிருந்த படித்துறைகள் காலாவதியாகிவிட்டன. இதனால் ஆவுடையார்குளத்தின் வடக்குகரையில் கணபதியா பிள்ளை மோட்டார் எதிரே முந்தைய காலங்களில் யானை குளிக்கும் இடமான பகுதியில் மட்டும் தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குளிக்கின்றனர். ஆனால் அங்கு படித்துறைகள் இல்லாததால் ஆழம் தெரியாமல் பக்தர்கள் உள்ளே இறங்கி ஆபத்திலும் சிக்கி உயிரிழக்கின்றனர்.

மேலும் துணி துவைப்பதற்கு கூட வசதி இல்லாததால் கற்களை தூக்கி போட்டு பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஆலமரத்து அடியில் பரந்து விரிந்து காற்றோட்டமான கரை இருப்பதால் ஆவுடையார்குளத்தின் வடக்கு கரைகளிலும் படித்துறைகள் அமைத்தால் அனைத்துத்தரப்பினரும் பயன்பெறுவர். மேலும் இங்கு நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post திருச்செந்தூர் ஆவுடையார்குளக்கரைகளில் படித்துறைகள் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article