
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
11-ம் திருநாளான இன்று மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்ந்தனர். அங்கு இரவு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களாளும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் மிதந்து கொண்டு இருந்த தேரில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமியும், அம்மாளும் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடந்தது.
12-ம் திருநாளான நாளை மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.