
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி, 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சூரி தனது தந்தை முத்துச்சாமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வெப் தொடராக அவரே தயாரித்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது இதில் நடிகர் சூரி, நாட்டுப்புற கலைஞராக தோன்றுவார் என்றும் சில காட்சிகளில் வயதான தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கப் போவதாகவும், இதில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.