திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடலில் புனித நீராடி மாலை அணிந்து முருக பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வருகின்றனர்.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
6-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
7-ம் திருநாளளன 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று (சனிக்கிழமை) திருவிழா தொடங்கும் நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் நேற்றே இடம் பிடித்து தங்கியுள்ளனர்.