திருச்சூர் பூரம் திருவிழாவில் பாரமேற்காவு, திருவம்பாடி கோயில்களின் யானை மீது முத்து மணிக்குடை மாற்றம்

13 hours ago 2

பாலக்காடு : உலகப்புகழ்ப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வடக்குநாதர் சிவன் கோயில் தெற்குகோபுர வாயில் வழியாக விளம்பர ஊர்வலம் நேற்று முன்தினம் துவங்கியது. எர்ணாகுளம் சிவக்குமார் யானை மீது நெய்தலைக்காவு அம்மன் தெற்கு கோபுர வாயில் வழியாக வெளியேறி ஆயிரக்கணக்கான மக்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து, செண்டை வாத்தியத்துடன் திருச்சூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வடக்குநாதர் தேக்கின்காடு மைதானத்தில் திரண்டனர். நேற்று காலை 7 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோயில் யானைகள் பஞ்ச வாத்தியத்துடன் வீதியுலா வந்து முன்னதாக வடக்குநாதர் கோயிலை வந்தடைந்தது.

திருச்சூர மாநகராட்சியிலுள்ள செம்புக்காவு பகவதி, பனமுக்கும்பிள்ளி சாஸ்தா, காரமுக்கு பகவதி, லாலூரர் பகவதி, சுரக்கோட்டுக்காவு பகவதி, அய்யந்தோள் பகவதி, நெய்தலைக்காவு பகவதி ஆகிய கோயில் யானைகளின் ஊர்வலம் வந்து வடக்குநாதரை வணங்கி செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பாரமேற்காவு அம்மன் கோயில் யானைகள் முன்பாக எழுந்தருளி பாண்டி மேளத்திற்கேற்ப குடை மாற்றம் நடந்தது. இதனைத்தொடர்ந்து வடக்குநாதர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள இலஞ்சித்தரையில் இலஞ்சித்தரை மேளம் (செண்டை வாத்தியம்) நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து திருவம்பாடி கிருஷ்ணர் கோயில் யானைகள் திருவீதியுலா வந்து மாலை 6 மணிக்கு வடக்குநாதர் கோயில் தெற்கு கோபுர மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பாரமேற்காவு, திருவம்பாடி கோவில்களின் யானைகள் மீது வண்ண முத்து மணிக்குடை மாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையும் நடந்தது.

The post திருச்சூர் பூரம் திருவிழாவில் பாரமேற்காவு, திருவம்பாடி கோயில்களின் யானை மீது முத்து மணிக்குடை மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article