சென்னை: ஒரகடம் அடுத்த நாவலூர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காயத்ரி (21). ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது, கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காயத்ரி நேற்று அவ்வழியே பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். அந்த வாலிபர் நாவலூர் பகுதியில் இறக்கிவிடாமல், ஏரிக்கரை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, பைக்கை நிறுத்திய வாலிபர், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த காயத்ரி, கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து, அந்த வாலிபரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால், பயந்துபோன அந்த வாலிபர் உடனடியாக பைக்கில் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து அப்பெண், செல்போனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நாவலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வாசித்து வரும் காந்தியப்பன் என்பதும், இவர் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் காந்தியப்பனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் appeared first on Dinakaran.