தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் நேற்று நேரில் பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் தாம்பரம், சானடோரியம் பகுதியில் ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணியின் தற்போதைய நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து 1வது மண்டலம், 29வது வார்டு பகுதியில் பாடசாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டுமானப் பணி, 31வது வார்டில் ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகக் கட்டுமானப் பணி, திருநீர்மலை சாலையில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் 50 டன் அளவில் எடைக் கணக்கிடும் எடைமேடை கட்டுமானப் பணி, திருநீர்மலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணி மற்றும் தொடக்கப்பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 5வது வார்டு, விஷ்வேஸ்வரபுரத்தில் உள்ள குப்பை மாற்று நிலையத்தினைப் பார்வையிட்டு, தாம்பரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். 4வது வார்டு, அனகாபுத்தூர் எஸ்பிஐ நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணி, காமராஜபுரத்தில் ரூ.1.47 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி, 1வது வார்டு, அனகாபுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீரேற்று நிலையத்தியினைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, 6வது வார்டு, பசும்பொன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டுமானப் பணி மற்றும் புனரமைப்புப் பணிகள், 10வது வார்டு, மூங்கில் ஏரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் பள்ளிக் கட்டடப் பணிகளைப் ஆய்வு செய்தார். மேற்கண்ட திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்ட ஆணையர் பாலச்சந்தர் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.