திருச்சூர் அருகே பிரியங்கா காந்தி வாகனத்தை வழிமறித்த யூடியூபர் மீது வழக்கு

1 day ago 3

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே பிரியங்கா காந்தி எம்பியின் வாகனத்தை செல்ல விடாமல் வழிமறித்த யூடியூபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா காந்தி எம்பி கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்தார். அப்போது வயநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரண்டு நாட்களுக்கு முன் மாலையில் மலப்புரம் மாவட்டம் வண்டூரில் உள்ள முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு சாதிக் அலியின் வீட்டில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு இரவு 9.30 மணியளவில் டெல்லி செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அவரது காருக்கு முன்பு பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் ஜீப் சென்று கொண்டு இருந்தது. திருச்சூர் அருகே மண்ணுத்தி புறவழிச்சாலையில் போலீஸ் ஜீப்புக்கு முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்தக் காரை முந்திச் செல்வதற்காக போலீஸ் ஜீப்பில் இருந்த டிரைவர் ஹாரன் அடித்தார். இதில் கோபமடைந்த காரின் டிரைவர் நடுரோட்டிலேயே வண்டியை நிறுத்தினார். இதனால் பிரியங்கா காந்தியின் காரையும் ரோட்டில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக போலீசை விரைந்து சென்று காரை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்துமாறு கூறினர். அப்போது கார் டிரைவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் காரை அப்புறப்படுத்தினார். அதன் பிறகே பிரியங்கா காந்தியின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மண்ணுத்தி போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டியவர் திருச்சூர் எளநாடு பகுதியை சேர்ந்த யூடியூபரான அனீஷ் ஆபிரகாம் என்று தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சூர் அருகே பிரியங்கா காந்தி வாகனத்தை வழிமறித்த யூடியூபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article